Wednesday, January 12, 2011

துணிந்து நில்... எதிலும் வெல்!

""என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன @வண்டு மானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். இந்த தேசத்தில் பிறந்த புழு கூட உண்மைக்காகவே உயிர்விட வேண்டும்,'' என்று முழக்கமிட்டவர்வீரத்துறவி விவேகானந்தர்.

கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார். இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மற்றவர்களெல்லாம் அங்குவந்திருந்தவர்களை "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் "டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்' என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

""கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,'' என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள "கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி' போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.""நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,'' என்றார் விவேகானந்தர்.""கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,' ' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.""அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?'' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,""இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!'' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,'' என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது. ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது.

அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.""இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,'' என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர். அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.

இன்று தேசிய இளைஞர் தினம்:இன்றைய இளைஞர்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்து தான் நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவரும், ஆன்மிகவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை, யோகா, சொற்பொழிவு, கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தனர். "நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் ' என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.

இளைஞர்களின் பொறுப்பு : நாட்டில் 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 42 கோடி பேருக்கு மேல் உள்ளது. இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞரிடமும் உள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நல்வழியில் பயன்படுத்தினால் இந்தியாவின் வல்லரசு கனவு எளிதில் நிறைவேறலாம். இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment