Friday, July 22, 2011

வழி

ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?

எண்ணம், சொல், செயல்

நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.

வாய்ப்பு

இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

பார்வை

நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.


உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
- Mark Twain.

சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
- Robert Allen.

நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.
- Dale Carnegie